மின்மயானம் கட்டும் பணி நிறுத்தம்: பல்லடத்தில் கடைகள் அடைப்பு பொதுமக்கள் பாதிப்பு

மின் மயானம் கட்டும் பணியை நிறுத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Update: 2019-04-11 22:00 GMT
பல்லடம், 

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த பணிக்கம்பட்டி கிராமத்தில் உள்ள வெங்கிட்டாபுரத்தில் மின் மயானம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின் மயானம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் அப்பகுதியில் மின் மயானம் கட்ட நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், மின் மயான அமைப்பு குழு, சில அரசியல் கட்சியினர், பல்லடம் பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பல்லடம் தாலுகா அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தனர்.

தாலுகா அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை மின்மயானம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அடுத்த கட்ட போராட்டம் நடத்த திட்டமிட்டனர். ஒரு சில அமைப்பினர் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் மின்மயான பிரச்சினை தொடர்பாக பல்லடம் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை முதல் பல்லடத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பல்லடம் பஸ் நிலையம், என்.ஜி.ஆர்.ரோடு, திருச்சி ரோடு, மங்கலம் ரோடு, தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பேன்சி கடைகள் என ஆயிரக் கணக்கான கடைகள் மூடப்பட்டு இருந்தன.

பல்லடத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தே காணப்பட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இருப்பினும் பஸ், லாரிகள், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் செய்திகள்