வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழப்புக்கு காரணமான பட்டாசு ஆலையை நடத்தி வந்தவர் விபத்தில் பலி
வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்புக்கு காரணமான பட்டாசு ஆலையின் அதிபர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். அவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது47). இவர் அதே பகுதியில் நெல்லை மாவட்ட எல்லையிலுள்ள வரகனூரில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். சுமார் 2 மாதத்திற்கு முன்பு இவரது பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டு போராட்டம் நடத்தி வந்த நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வந்து, இந்த ஆலை திறக்கப்பட்ட முதல் நாளே வெடி விபத்து நடந்தது.
இதில் பெண்கள் உள்பட 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு ஆலை அதிபரான அய்யாச்சாமியை கைது செய்தார்கள். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் அவர் அதிகாலையில் பட்டாசு ஆலைக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். துலுக்கன்குறிச்சி அருகே வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்து சாலையில் கிடந்த அவரை அந்த பகுதியில் சென்றவர்கள் மீட்டு சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யாச்சாமி இறந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.