பல்லடத்தில் அரசு பஸ் மீது கல்வீச்சு; பெண் பயணி படுகாயம் போலீசார் விசாரணை
பல்லடத்தில் அரசு பஸ் மீது கல்வீசப்பட்டது. இதில் பெண் பயணி ஒருவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்,
மதுரையில் இருந்து கோவைக்கு நேற்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சை மதுரை தெற்கானூர் ராணியை சேர்ந்த சிவா(வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் கண்டக்டராக மதுரை காளப்பன்பட்டியை சேர்ந்த காசிமாயன்(57) என்பவர் பணியாற்றினார். அந்த பஸ்சில் 60 பயணிகள் பயணம் செய்தனர்.
அந்த பஸ் நேற்று காலை 11 மணி அளவில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பனப்பாளையம் அருகே வந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி ஒருவன் திடீரென்று பஸ்சின் மீது கல்வீசினான். இதனால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தினார். அதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
மர்ம ஆசாமி பஸ் மீது கல்வீசி தாக்கியதில் பஸ்சில் முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த குண்டடம், தாயம்பாளையத்தை சேர்ந்த அங்கமுத்துவின் மனைவி கலாமணி(39) என்பவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை டிரைவர், கண்டக்டர் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல்லடம் போலீசில் டிரைவர் சிவா புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி யார்? எதற்காக அரசு பஸ் மீது கல்வீசினார்? என்ற விவரம் தெரிய வில்லை. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது போன்ற அசம்பாவித சம்பவத்தில் ஈடுபட்ட அந்த ஆசாமி யார்? சாலையோரம் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் அந்த ஆசாமி உருவம் ஏதேனும் பதிவாகி இருக்கிறதா? எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.