தேசிய விருதுகள் பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் 20-ந் தேதி கடைசி நாள்
தேசிய விருதுகள் பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாளாகும்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி எஸ்.ஜெயச்சந்திரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தேசிய அளவிலான சாதனைகள் படைத்தவர்களுக்கும், வீரதீர செயல் புரிந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி நாட்டுக்கு பெருமை தேடி தரும் வகையில் செயல்பட்ட சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட உள்ளதால் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் அமைதிக்கான காந்தி விருது, துரோணாச்சாரியார் விருது, ராஷ்ட்டிரீய கேல் புரட்சகான் புரஸ்கார் விருது, அர்ஜூனா விருது, தயான் சந்த் விருது, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, அசோக சக்ரா விருது ஆகிய 7 விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in அல்லது www.yas.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு வருகிற 25-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். எனவே விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி அலுவலகத்தில் வருகிற 20-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறிஇருந்தார்.