உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு வந்த மூதாட்டி திடீர் மரணம் - வீடு தீப்பிடித்ததால் பரபரப்பு
உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக வந்த மூதாட்டி திடீரென மரணம் அடைந்தார். இதனிடையே துக்க வீடு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
கூடலூர் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது தாயார் அய்யம்மை(வயது 80) உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மாலை காலமானார். இதுகுறித்து துக்கம் விசாரிக்க கோவையிலிருந்து ஜெயராஜின் மாமியார் ராஜாமணியம்மாள்(80) நேற்று கூடலூர் வந்தார்.
துக்கவீட்டிற்கு வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை கம்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இந்நிலையில், அய்யம்மையின் உடலை அடக்கம் செய்ய ஜெயராஜின் உறவினர்களும், பொதுமக்களும் கூடலூரிலுள்ள மயானத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது ஜெயராஜ் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கம்பம் தீயணைப்புநிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதையொட்டி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீவிபத்தில் வீட்டிலிருந்த கட்டில், பீரோ, துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.