“செண்பகவல்லி அணை உடைப்பை சரிசெய்ய நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்” தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் வாக்குறுதி

“செண்பகவல்லி அணை உடைப்பை சரிசெய்ய நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்“ என தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் வாக்குறுதி அளித்தார்.

Update: 2019-04-11 22:30 GMT
வாசுதேவநல்லூர்,

தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் தனுஷ்குமார் கிராமம், கிராமமாக சென்று தீவிரமாக வாக்கு சேரித்து வருகிறார். நேற்று வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாசுதேவநல்லூர், சிவகிரி, ராயகிரி ஆகிய பகுதிகளுக்கு சென்றார். பின்னர் வாசுதேவநல்லூர் ஒன்றிய பகுதிகளான தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தென்மலை, துரைச்சாமியாபுரம், கூடலூர், டி.ராமநாதபுரம், ஆத்துவழி, சுப்பையாபுரம், நாரணபுரம், நெல்கட்டும்செவல், தலைவன்கோட்டை, வெள்ளானைக்கோட்டை, சங்கனாப்பேரி, திருமலாபுரம் உள்பட 45-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்தஜீப்பில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

பிரசாரத்தின்போது வேட்பாளர் தனுஷ்குமார் பேசுகையில், “தென்காசி நாடாளுமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் விவசாயம் நிறைந்த இப்பகுதியில் தண்ணீர் தேவை ஆண்டு முழுவதும் கிடைப்பதற்கு வாசுதேவநல்லூர் தலையணைக்கு மேற்பகுதியில் உள்ள செண்பகவல்லி அணை உடைப்பை சரிசெய்ய நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். சிவகிரி கோம்பை ஆறு அணைக்கட்டு திட்டம் பற்றி பேசி இப்பகுதி விவசாயிகளின் நீராதாரத்தை பாதுகாப்பேன். கிராமப்புற சாலை வசதிகளை தரம் உயர்த்த பாடுபடுவேன். அடிப்படை வசதிகளை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன். இவை அனைத்தும் உடனே நிறைவேற மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் நல்லாட்சி மலர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும்“ என்றார்.

நிகழ்ச்சியில் தொழில் அதிபர் அய்யாத்துரை பாண்டியன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி.சீனிவாசன், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் முத்தையா பாண்டியன், நெல்லை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் பொன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், பேரூர் செயலாளர்கள் செண்பகவிநாயகம், குருசாமி, சரவணன், மாவட்ட காங்கிரஸ் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் திருஞானம், வாசுதேவநல்லூர் வட்டார தலைவர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், ம.தி.மு.க சார்பில் கிருஷ்ணகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் ராமசுப்பு, நடராஜன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மாவட்ட குழு உறுப்பினர் சிங்காரவேலு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் சென்றனர். 

மேலும் செய்திகள்