குலசேகரன்பட்டினத்தில் இருதரப்பினர் மோதல்: டாஸ்மாக் பார் சூறை; 5 பேர் கைது

குலசேகரன்பட்டினத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் டாஸ்மாக் பார் சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-11 22:00 GMT
குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் காவடி பிறை தெருவைச் சேர்ந்தவர் வடிவேலு. இவருடைய மகன் ஹரி கிருஷ்ணன் (வயது 35). இவர் நேற்று முன்தினம் மாலையில் குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றார். அப்போது அவருக்கும், டாஸ்மாக் பார் உரிமையாளரான உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் முத்துகுமாருக்கும் (24) இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிகிருஷ்ணன், அவருடைய உறவினர்களான ராமசுப்பு (62), அவருடைய மகன்கள் கிருஷ்ணகோபால் (32), கார்த்தீசன் (25), மணிகண்டன் (22) ஆகிய 5 பேரும் சேர்ந்து டாஸ்மாக் பாரை சூறையாடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சுடலைமுத்து, அவருடைய மகன் முத்துகுமார், சாதரக்கோன்விளையைச் சேர்ந்த கந்தன் (45), குலசேகரன்பட்டினம் மேல மறக்குடி தெருவைச் சேர்ந்த சுடலைமணி (35) ஆகிய 4 பேரும் சேர்ந்து ராமசுப்புவின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த லோடு ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனை தடுக்க முயன்ற ராமசுப்புவின் மகள் ஜெயாவுக்கு (36) கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரி கிருஷ்ணன், ராமசுப்பு, சுடலைமுத்து, கந்தன், சுடலைமணி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்