தேர்தலில் வெற்றி பெற்றாலும் ‘மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க தயாராக இருக்கிறேன்’ டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
‘தேர்தலில் வெற்றி பெற்றாலும் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க தயாராக இருக்கிறேன்’ என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலையில் தனது பிரசாரத்தை எப்போதும் வென்றான் அருகே உள்ள சோழபுரம் பகுதியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் தொடங்கினார்.
தொடர்ந்து அவர் புங்கவர்நத்தம், போடுபட்டி, பொம்மையாபுரம் பசுவந்தனை, எப்போதும் வென்றான், குறுக்குச்சாலை, கே.சண்முகபுரம், வேடநத்தம், குளத்தூர், பனையூர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு மதியம் 1.30 மணிக்கு வேப்பலோடையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். பிரசாரத்தின் போது தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது;-
உங்கள் வீட்டு பெண்ணாக, இந்த மண்ணிற்கு சொந்தக்காரியாக உங்களுக்கு தேவையான திட்டங்களை என்னால் செயல்படுத்த முடியும் என்பதால் நான் உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். கனிமொழி விருந்தாளி போல் வந்துவிட்டு சென்று விடுவார். அவருக்கும் இந்த பகுதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது தேசிய மண். தேச பக்தர்கள் பிறந்த மண். ஒரு ஊழல்வாதிக்கு இந்த மண் எந்த விதத்திலும் இடம் கொடுக்காது. நான் தூய்மையான அரசியல்வாதி. எனக்கு திகார் சிறைக்கு முகவரி தெரியாது. 12 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்த அவர் ஆர்.ராசாவுடன் சேர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை சுருட்டியிருக்கிறார்.
நான் வெற்றி பெற்று எம்.பி. ஆனாலும் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க தயாராக இருக்கிறேன். ஜெயலலிதா சின்னத்திற்கும், மோடியின் சின்னத்திற்கும் ஓட்டு போடும் வாய்ப்பை மக்களாகிய நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். நல்லது நடக்க வேண்டும் என்றால் தாமரை சின்னத்துக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் எப்போதும் வென்றான் பகுதிக்கு சென்ற போது 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது தேசிய அளவில் விரைவு சைக்கிள் போட்டியில் பங்குபெறும் கல்லூரி மாணவி சுமித்ரா உதவி கேட்டு தமிழிசை சவுந்தரராஜனிடம் மனு கொடுத்தார். இதுகுறித்து தேர்தலுக்கு பிறகு அனைத்து உதவிகளும் செய்து தருவதாக உறுதியளித்தார்.
முன்னதாக விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனை ஆதரித்து பா.ஜனதா மாநில தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பாறு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
அவருடன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன், நெல்லை-தூத்துக்குடி ஆவின் தலைவர் சின்னத்துரை, யாதவர் முன்னேற்ற பேரவை தலைவர் தேவநாதன், முன்னாள் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.