மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் 10 சுயேச்சை வேட்பாளர்கள் ஒரே வாகனத்தில் தேர்தல் பிரசாரம்

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் 10 சுயேச்சை வேட்பாளர்கள் ஒரே வாகனத்தில் சீர்காழியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-11 23:00 GMT
சீர்காழி,

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 10 பேர் சுயேச்சைகள். இவர்கள் அனைவரும் நிலம், நீர் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் களம் இறங்கி உள்ளனர். இவர்களுக்கு தனித்தனி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டாலும் 10 பேரும் ஒன்றாக இணைந்து ஒரே வாகனத்தில் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.

பொதுவாக ஒரு வேட்பாளர், தனது ஆதரவாளர்களுடன் சென்று தனது சின்னத்துக்கு வாக்குசேகரிப்பது வழக்கம். ஆனால் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 10 சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் ஒரே நேரத்தில், ஒரே இடத்துக்கு, ஒரே வாகனத்தில் சென்று வாக்காளர்களிடம் வாக்குசேகரித்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கேள்வி கேளுங்கள்

நேற்று இந்த 10 சுயேச்சை வேட்பாளர்களும் சீர்காழியில் வாக்குசேகரித்து பிரசாரம் செய்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

“நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை. உங்களிடம் வாக்கு கேட்டு வருவோரிடம் கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா? கருப்பு பணம் ஒழிக்கப்பட்டு விட்டதா? என கேளுங்கள்.

வருடத்துக்கு 1½ லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்ற வாக்குறுதி என்ன ஆனது? அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? என்று கேளுங்கள். பா.ஜனதா அரசு விதித்த ஜி.எஸ்.டி. வரியால் சிறு, குறு தொழில்கள் நசிந்து போய் விட்டன. நீட் தேர்வால் அனிதா இறந்தபோது நீங்கள் ஏன் வாய் திறக்கவில்லை? என கேளுங்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டம்

பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் கொண்டு வரமாட்டோம் என்று தமிழக அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டம் முற்றிலும் விவசாயத்தையும், நிலத்தடி நீரையும் பாதிக்கும் என்பதை அமைச்சர்கள் உணரவில்லை. எனவே ஓட்டு கேட்டு வருகிறவர்களிடம் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அகதியாகி விடுவோம் என்று கூறி, அந்த திட்டத்தை கைவிட சொல்லுங்கள். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துங்கள் என்று பொதுமக்களிடம் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேர்தல் களத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் 10 பேர் ஒருங்கிணைந்து வாக்குசேகரிக்கும் சுவாரஸ்யமான சம்பவம் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் முதல் முறை என்பதால் இந்த பிரசாரம் பொதுமக்களை கவர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்