ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி பிரசாரம்

ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி தீவிர பிரசாரம் செய்தார்.

Update: 2019-04-11 22:00 GMT
ஓசூர், 

ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் ஓசூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் தலைமையில் ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்த அக்ரஹாரம், பேகேபள்ளி, நல்லூர், சொக்கநாதபுரம், கூஸ்தனபள்ளி, சேவகானபள்ளி, கக்கனூர், கொத்தப்பள்ளி, பாகலூர், பெலத்தூர் சர்க்கிள், தேவீரப்பள்ளி, அலசபள்ளி, தும்மனபள்ளி, முகலபள்ளி கேட் நந்திமங்கலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வேனில் நின்றவாறு வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ஓசூர் சட்டமன்ற தொகுதியில் மேலும் வளர்ச்சிப்பணிகள் தொடர்ந்திடவும், இத்தொகுதி மக்களின் வாழ்வாதரம் உயர்ந்திடவும் பாடுபடுவேன், மேலும், வீடில்லாத தகுதியுடைய ஏழை, எளிய மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் புதிய வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வேன், கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மண் சாலைகளையும் தார் மற்றும் சிமெண்டு சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். அனைத்து பகுதிளிலும் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன். எனவே, தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதே போல கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கே.பி.முனுசாமிக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த பிரசாரத்தின் போது, ஓசூர் நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.நாராயணன், மாவட்ட பிரதிநிதி சிட்டிஜெகதீசன், ஒன்றிய துணை செயலாளர் ஜெயராம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெ.எம்.சீனிவாசன், பிரபாகர் ரெட்டி, ஓசூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் பி.ஆர்.வாசுதேவன், அசோகா, பா.ஜ.க. கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் முனிராஜூ மற்றும் கூட்டணி கட்சியினரும் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்