ஓசூரில் துண்டு பிரசுரம் வழங்கி வாக்காளர்களுக்கு தேர்தல் பொதுபார்வையாளர் விழிப்புணர்வு

ஓசூரில் துண்டு பிரசுரம் வழங்கி வாக்காளர்களுக்கு தேர்தல் பொது பார்வையாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2019-04-11 22:15 GMT
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு ஓசூர் முல்லை நகரில் உள்ள வேளாண்மை வணிக மைய கட்டிட வளாகத்தில், ஓசூர் தொகுதிக்கு உட்பட்ட 364 வாக்குச்சாவடி மையங்களுக்கு 364 பேலட் யூனிட், கூடுதல் இருப்பாக 62 எந்திரங்கள் என 426 எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெற்றது.

இந்த பணிகளை ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொதுபார்வையாளர் கல்யாண்சந்த் ஷமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து, ஓசூர் உழவர் சந்தையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் பொது பார்வையாளர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது, ஓசூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி கலெக்டருமான விமல்ராஜ், தாசில்தார் பாலசுந்தரம், தொடர்பு அலுவலர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்