நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு 2-ம் கட்டமாக சரிபார்ப்பு
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகள் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் 2-ம் கட்டமாக சரிபார்க்கப்பட்டது.
நாமக்கல்,
வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த போது அவர்களுக்கு தினந்தோறும் செலவு கணக்கு விவரங்களை பராமரிக்க தேர்தல் ஆணையத்தால் பதிவேடுகள் வழங்கப்பட்டன. மேலும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு செலவுகளையும் அதற்குரிய ஆவணங்களுடன் மேற்கொள்ளவும், வேட்பாளர்கள் தேர்தலுக்காக செய்யும் செலவுகளுக்காக தனியாக ஒரு வங்கி கணக்கு தொடங்கி, அந்த வங்கி கணக்கின் மூலமாகவே அனைத்து செலவுகளையும் வரைவோலை அல்லது காசோலைகள் மூலமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
உதவி செலவின பார்வையாளர்கள் பராமரித்து வரும் நிழற்பதிவேடுகளில் உள்ள வேட்பாளர்களின் செலவு கணக்கு விவரங்களை, வேட்பாளர்கள் பராமரித்து வரும் செலவு விவர பதிவேடுகளுடன் ஒப்பிட்டு குறிப்பிட்ட நாட்களில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களுடைய முகவர் களுடன் சரிபார்க்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
அதன் அடிப்படையில் முதல்கட்டமாக கடந்த 3-ந் தேதி வேட்பாளர்களின் செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. 2-ம் கட்டமாக நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர்கள் மயூர் காம்ளே, ராஜேஸ் ஆகியோர் செலவு கணக்குகள் அடங்கிய விவர பதிவேடுகளை பார்வையிட்டு சரிபார்த்தனர்.
மேலும், வேட்பாளர்களின் தேர்தல் செலவு விவர பதிவேடுகள் வருகிற 15-ந் தேதி 3-ம் கட்டமாக சரிபார்க்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பு அலுவலர் நந்தகுமார் மற்றும் உதவி செலவின பார்வையாளர்கள் உடன் இருந்தனர்.