‘மத்திகிரி சர்க்கிளில் மேம்பாலம் அமைக்கப்படும்’ அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி உறுதி

மத்திகிரி சர்க்கிளில் மேம்பாலம் அமைக்கப்படும் என அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி கூறினார்.;

Update:2019-04-11 03:45 IST
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி போட்டியிடுகிறார். இதை முன்னிட்டு அவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று ஓசூர் ரெயில் நிலைய சாலை, பிரகாஷ் நகர், காந்தி நகர், மிடிகரபள்ளி, ஐ.டி.ஐ. தின்னூர், குருபட்டி, ஆகிய இடங்களில் தெருத் தெருவாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அப்போது பெண்கள், ஜோதி பாலகிருஷ்ணரெட்டிக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, ஓசூர் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யவும், விபத்துகளை தவிர்க்கவும் தேன்கனிக்கோட்டை ரோடு சர்ச் அருகிலும், ரிங் ரோடு பிரிவு, அந்திவாடி சர்க்கிள், மத்திகிரி சர்க்கிள் மற்றும் தர்கா, பத்தலபள்ளி, ராயக்கோட்டை ரோடு உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.

ஓசூர் தொகுதியில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற நிச்சயம் பாடுபடுவேன் என்று உறுதியளித்து, தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதேபோல், ஓசூர் முதலாவது சிப்காட் வளாகத்தில் உள்ள டைட்டான் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர் களிடம் ஜோதி பால கிருஷ்ணரெட்டி வாக்கு சேகரித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பின்போது, ஓசூர் நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.நாராயணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெ.எம்.சீனிவாசன், ஓசூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.வாசுதேவன், முன்னாள் நகர்மன்ற தலைவர் ராமு, பிரபாகர் ரெட்டி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சாக்கப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்