ஆண்டிப்பட்டியில் நாளை மறுநாள் பிரதமர் நரேந்திரமோடி பிரசாரம் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு
பிரதமர் நரேந்திரமோடி ஆண்டிப்பட்டியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதற்காக பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தேனி,
அ.தி.மு.க. கூட்டணி சார்பில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். அதுபோல் இடைத்தேர்தல் நடக்கும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக லோகிராஜன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக மயில்வேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு வாக்கு சேகரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ந்து பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகின்றனர்.
இந்நிலையில், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டிக்கு வருகிறார். ஆண்டிப்பட்டி அருகே கரிசல்பட்டி விலக்கு பகுதியில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசுகிறார்.
இதற்காக பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், பொதுக்கூட்ட மேடை அருகே பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்காக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது. மோடி பயணம் செய்து வரும் ஹெலிகாப்டர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் வரும் ஹெலிகாப்டர்கள் என 3 ஹெலிகாப்டர்கள் இறங்கும் வகையில் இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் இருந்து மேடை வரை உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
இந்த பாதுகாப்பு பணிக்காக பிற மாவட்டங்களில் இருந்தும் போலீசார் தேனிக்கு வர உள்ளனர். சுமார் 3 ஆயிரம் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிரசார மேடை அமைந்துள்ள இடத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது.
பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தேனிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கூட்டம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்துக்கு சென்று முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.