அம்மிக்கல்லை தலையில் போட்டு தி.மு.க. எம்.எல்.ஏ. உறவினர் கொலை
நத்தம் அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு தி.மு.க. எம்.எல்.ஏ.வின் உறவினர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நத்தம்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேர்வீட்டை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 62). விவசாயி. இவர் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலத்தின் மைத்துனர் ஆவார். நேற்று முன்தினம் இரவு செல்லப்பா, கிராமத்தின் அருகே உள்ள தோட்டத்து வீட்டுக்கு தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தோட்டத்துக்கு வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு செல்லப்பா கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாசினி, போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னத்தம்பி, இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் செல்லப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து கொண்டனர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் ரூபி வரவழைக் கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிபோய் நின்றது. ஆனால் அது யாரையும் கவ்விபிடிக்கவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் செல்லப்பாவின் தம்பி மகன் செல்லமணியை (25) பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், செல்லப்பாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். செலவுக்கு பணம் தராததால் அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.