“முழங்கால் வலி சிகிச்சைக்கு சென்ற என்னை மயக்க ஊசி போட்டு பலாத்காரம் செய்தார்” பெரியகுளம் அ.ம.மு.க. வேட்பாளர் மீது பெண் கொடுத்த புகாரில் அதிர்ச்சி தகவல்
பெரியகுளம் அ.ம.மு.க. வேட்பாளர் மீது பெண் கொடுத்த புகாரில், முழங்கால் வலி சிகிச்சைக்கு சென்றபோது மயக்க ஊசி போட்டு தன்னை பலாத்காரம் செய்தார் என்று கூறி உள்ளார்.
தேனி,
பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் கதிர்காமு (வயது 61). முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் இவரும் ஒருவர்.
தற்போது இவர், பெரிய குளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை குறித்த முழுமையான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி கதிர் காமு ஒரு பெண்ணுடன் படுக்கையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் குறித்த முழுமையான விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. புகாரில் அந்த பெண் கூறியிருப்பதாவது:-
கடந்த 2015-ம் ஆண்டு எனது தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அல்லிநகரத்தில் உள்ள டாக்டர் கதிர்காமுவின் மருத்துவமனைக்கு சென்றோம். அப்போது எனக்கும் முழங்கால் வலி ஏற்பட்டதால் அவரிடம் வைத்தியம் பார்க்க நேரிட்டது. எனக்கு மயக்க ஊசி போட்டதால் நான் மயங்கிவிட்டேன். மயக்கத்தில் இருந்தபோது, என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அவரிடம் நியாயம் கேட்டபோது, நான் மயக்கத்தில் இருந்தபோது நிர்வாணமாக புகைப்படம், வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், தனக்கு இணங்காவிட்டால் அதை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டி பலமுறை அவருடைய ஆசைக்கு என்னை இணங்க வைத்தார். பின்னர் அவர் எம்.எல்.ஏ. ஆகி விட்டார். பலமுறை அவரை தொடர்பு கொண்டு என்னுடைய புகைப்படம், வீடியோக்களை கொடுத்து விடுங்கள் என்று கேட்டேன். இதுதொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் எம்.எல்.ஏ. அலுவலகம் சென்றேன். அப்போது அங்கு கதிர்காமுவுடன் இன்னொரு எம்.எல்.ஏ. மற்றும் 3 பேர் இருந்தனர். அவர்கள் சென்ற பிறகு, அந்த எம்.எல்.ஏ.வும் என் மீது ஆசைப்படுவதாக கதிர்காமு கூறி மிரட்டினார்.
இவ்வாறு அவர் புகார் அளித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.