நல்லாட்சி தரக் கூடாது என்பதற்காக வைத்திலிங்கத்துக்கே தொந்தரவு செய்தார்: நாராயணசாமி மீது, ரங்கசாமி பகீர் குற்றச்சாட்டு

நல்ல ஆட்சி தந்து விடக்கூடாது என்பதற்காக முதல் அமைச்சராக இருந்தபோது வைத்திலிங்கத்துக்கு தொந்தரவு செய்தவர்தான் நாராயணசாமி என்று தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.

Update: 2019-04-10 23:15 GMT
பாகூர்,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சி தலைவர் ரங்கசாமி கிராமப்புறங்களில் நேற்று தீவிர பிரசாரம் செய்தார்.

ஏம்பலம் தொகுதி கோர்க்காட்டில் பிரசாரத்தை தொடங்கிய ரங்கசாமி, செம்பியப்பாளையம், ஏம்பலம், கம்பளிக்காரன்குப்பம், கரிக்கலாம்பாக்கம், அரங்கனூர், சேலியமேடு, குடியிருப்பு பாளையம், பிள்ளையார்குப்பம், பனித்திட்டு ஆகிய கிராமங்கள் வழியாக சென்று கிருமாம்பாக்கத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

கிருமாம்பாக்கத்தில் பொதுமக்கள் மத்தியில் ரங்கசாமி பேசியதாவது:-

புதுச்சேரி ஆட்சியாளர்களின் கூத்துகளை நினைக்க, நினைக்க வேதனையாக உள்ளது. திட்டங்களை நிறைவேற்ற கவர்னர் ஒப்புதல் தரவில்லை என்று கூறுகின்றனர். கவர்னர் ஒப்புதல் தருவதற்கு முன்பே இலவசமாக வழங்க வேட்டி, சேலைகளை வாங்கி குடோனில் குவித்து வைத்தனர். இதுபோல் செயல்பட்டால் எப்படி ஒப்புதல் தருவார்கள்?

நான் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு ஆண்டு கூட தண்ணீர் வரியை உயர்த்தியது கிடையாது. ஆனால் இப்போது புதிதாக குப்பைக்கும் வரி போட்டுள்ளனர். சினிமாவில் வருவதைப்போல் தொட்டதற்கெல்லாம் வரி விதித்துள்ளனர். புதுச்சேரி அரசின் வருவாயை அதிகரித்துள்ளோம், அதில் 99.25 சதவீதம் செலவு செய்துள்ளோம் என்கின்றனர். அப்புறம் ஏன் திட்டங்களை நிறைவேற்றவில்லை?

கடந்த தேர்தலில் நிறுத்திய வேட்பாளரை ஏன் தற்போது நிறுத்தவில்லை என்று கேட்கின்றனர். அவர் மாநில, உள்ளூர் அரசியலுக்கு வர நினைத்தார். அதனால் அவரை நிறுத்தவில்லை. காங்கிரசில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து நல்ல அனுபவம் உள்ளவர் நாராயணசாமிதான். அவர் முதல்-அமைச்சர் பதவியை விட்டு இறங்கி, நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வேண்டியதுதானே.

கடந்த சட்டமன்ற தேர்தலில் நமச்சிவாயம் தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று கூறி வாக்கு சேகரித்தனர். ஆனால் முதல்வர் பதவிக்கு நாராயணசாமி வந்துவிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் ஏன் மாநில அரசியலை பேசுகின்றீர்கள்? என கேட்கிறார். மாநில ஆட்சி சரியாக இல்லை என்பதால் கேட்கிறோம். மோடியின் பெயரைச் சொல்ல எங்களுக்கு பயமில்லை. எத்தனையோ முறை அவர் பெயரை பிரசாரத்தில் கூறுகின்றேன்.

நான் மட்டுமில்லை, தற்போதைய காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முதல்-அமைச்சராக இருந்தபோதும் புதுச்சேரியில் நல்ல ஆட்சி தந்து விடக்கூடாது என்பதற்காக தொந்தரவு செய்தவர்தான் நாராயணசாமி. தற்போது ஏமாற்றி முதல்வர் ஆகியுள்ளார். பதவி ஆசையால் நேராக வராமல் பின்புறமாக அந்த பதவிக்கு வந்துள்ளார்.

இந்த தேர்தலோடு ரங்கசாமியின் அரசியல் முடிந்துவிட்டது, பூசாரி ஆகிவிடுவார் என்று கூறுகின்றார். இது வேடிக்கையாக உள்ளது. எனக்கு பதவியை சாமி கொடுத்தார், நிற்க வைத்தார், தற்போதும் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அதை நான் மறுக்கவில்லை. நான் சென்ற சாமியிடம் நீங்கள் ஏன் சென்று வருகிறீர்கள்? இதுவரை அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டேன்.

மத்திய மந்திரியாக இருந்து என்ன செய்தீர்கள்? என்று அவரிடம் நான் கேட்டேன். அதற்கு இதுவரை பதில் சொல்லவில்லை. செய்திருந்தால் தானே சொல்வார். இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

மேலும் செய்திகள்