தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி

தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது என்று விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.

Update: 2019-04-10 23:00 GMT
திருச்சி,

நதிகளை இணைக்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்க வேண்டும். 60 வயது முடிந்த அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வெளிநாட்டுகளில் இருந்து மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது. சிறு, குறு விவசாயிகள் என அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.

ஆனால் கடன் தள்ளு படியை தவிர, எங்களது 5 கோரிக்கைளை பா.ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றுவதாக கூறி இருக்கிறார்கள். இதனை வரவேற்கிறோம். ஆனால் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் எங்களுடைய ஆதரவு கிடையாது. விவசாயிகள் தனிப்பட்ட முறையில் அவரவர் விருப்பப்பட்ட கட்சிகளுக்கு வாக்களிக்கலாம்.

அதேநேரம் எங்களது அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிக்கே தேர்தலில் ஆதரவு அளிப்போம். மேலும், எங்களை பற்றி பேஸ்புக், வாட்ஸ்அப்களில் சிலர் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள். அவர்கள் மீது கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு, மாநில பொதுச்செயலாளர் பழனிவேல், துணைத்தலைவர் கிருஷ்ணன் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்