மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தப்பட்டது கலெக்டர் பார்வையிட்டார்
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. இதனை கலெக்டர் ராமன் பார்வையிட்டார்.
வேலூர்,
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலும், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
வேலூர் தொகுதியில் 23 வேட்பாளர்களும், அரக்கோணம் தொகுதியில் 16 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதனால் இந்த தொகுதிகளில் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
தேர்தல் தேதி நெருங்கியதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
வேலூர் தொகுதியில் 3 ஆயிரத்து 253 வாக்குப்பதிவு மையங்களும், அரக்கோணம் தொகுதியில் 1,700 வாக்குப்பதிவு மையங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. அதேபோன்று இடைத்தேர்தல் நடக்கும் சோளிங்கர் தொகுதியில் 299 மையங்கள், குடியாத்தம் தொகுதியில் 290 மையங்கள், ஆம்பூர் தொகுதியில் 242 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம், புகைப்படம் ஆகியவை பொருத்தி ‘சீல்’ வைக்கும் பணி நேற்று தொடங்கியது. வேலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த இந்த பணியை கலெக்டர் ராமன் பார்வையிட்டார்.
அப்போது உதவி கலெக்டர் மெகராஜ், தாசில்தார் ரமேஷ் மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.
அதேபோன்று அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இந்த பணி நடைபெற்றது. பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி இன்றும் (வியாழக்கிழமை) நடக்கிறது. பின்னர் பெயர், சின்னம் பொருத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல்வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். 17-ந் தேதி போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.