சேலம் தொகுதி வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பு

சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனுக்கு ஆதரவாக பனமரத்துப்பட்டியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-09 23:04 GMT
பனமரத்துப்பட்டி,

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக கே.ஆர்.எஸ். சரவணன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலசந்திரன், அ.தி.மு.க. பேரூர் செயலாளர் சின்னத்தம்பி என்கிற காளியண்ணன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வீடு, வீடாகச் சென்று ஓட்டு சேகரித்தனர்.

அப்போது அவர்கள் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்களை விளக்கி கூறினர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டலின்படி பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, தமிழக அரசு சார்பில் ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தேர்தலுக்கு பிறகு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும்.

மேலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர், ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, முதியவர்களுக்கு உதவித்தொகை போன்றவை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வெற்றிக் கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கூட்டணியால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.

தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினரால் மக்களுக்கு நல்லது எதையும் செய்ய முடியாது. எனவே மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நிலையான ஆட்சி அமைந்திடவும், தமிழகத்தில் அமைதியான ஆட்சி தொடர்ந்திடவும் இரட்டை இலைச்சின்னத்தில் வாக்களித்து அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

இந்த பிரசாரத்தின் போது பா.ம.க மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. நகர செயலாளர் ஈஸ்வரன், பா.ஜ.க. பேரூர் தலைவர் சின்ராஜ், த.மா.கா பேரூர் தலைவர் வெங்கடேஷ், பேரூராட்சி முன்னாள் தலைவர் பெரியசாமி, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் வெங்கடேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய இணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்