கூடலூர்-முதுமலை எல்லையில், மரவள்ளி கிழங்கு, வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கூடலூர்-முதுமலை எல்லையோர கிராமத்தில் பயிரிட்டு இருந்த மரவள்ளிக்கிழங்கு, வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
கூடலூர்,
கூடலூர்- முதுமலை எல்லையோரத்தில் உள்ள தொரப்பள்ளி, குனில், புத்தூர்வயல், அள்ளூர்வயல் உள்ளிட்ட குக்கிராமங்களுக்குள் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு அள்ளூர்வயல் கிராமத்துக்குள் 5 காட்டு யானைகள் நுழைந்தன. விடிய விடிய அப்பகுதியில் நின்றிருந்த யானைகள் அங்கு பயிரிட்டு இருந்த வாழை, மரவள்ளிக்கிழங்கு பயிர்களை சேதப்படுத்தின. இதில் ராஜேந்திரன் உள்பட சில விவசாயிகள் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, காட்டு யானைகள் இரவில் வந்து பயிர்களை தின்று விட்டு செல்கின்றன. இது சம்பந்தமாக வனத்துறையிடம் முறையீட்டாலும் நடவடிக்கை எடுப்பது இல்லை. இதுவரை 250 வாழைகள், 400 மரவள்ளிக்கிழங்கு செடிகள் நாசமாகிவிட்டது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால் பகுதியை சேர்ந்த அப்துல்கலாம் என்பவரது வீட்டு மதிற்சுவரை காட்டு யானைகள் நேற்று காலை 5 மணிக்கு இடித்து தள்ளின. இதில் சுவர் சரிந்து விழுந்தது. சத்தம் கேட்டு அப்துல்கலாம் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது காட்டு யானைகள் வெளியே நின்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, சேரம்பாடி வனச்சரகர் சின்னதம்பி, வன காப்பாளர் ராபர்ட் வில்சன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் யானைகளை விரட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.