அ.தி.மு.க.வினர் இரவு, பகல் பாராமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

அ.தி.மு.க.வினர் இரவு, பகல் பாராமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

Update: 2019-04-09 23:00 GMT
நிலக்கோட்டை,

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துக்கு மாம்பழம் சின்னத்திலும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் தேன்மொழி சேகருக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்குகேட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் நிலக்கோட்டை பகுதியில் வாக்குகள் சேகரித்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் தேன்மொழி சேகர் கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிலக்கோட்டைக்கு வந்து சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து பூத் கமிட்டி அ.தி.மு.க. நிர்வாகிகளையும், ஒன்றிய, நகர நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை வழங்கினார். அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும். நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலும் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியிலும் கட்சி நிர்வாகிகள் இரவு, பகல் பாராமல் தேர்தல் பணியாற்ற வேண்டும். நிலக்கோட்டை மற்றும் வத்தலக்குண்டு ஆகிய ஒன்றியங்களில் உள்ள நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகளுடனும், அ.தி.மு.க. தொண்டர்களும் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். மேலும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். நிலக்கோட்டை தொகுதி சட்டமன்ற வேட்பாளர் தேன்மொழி சேகரும், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவும் அதிக வாக்குகள் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் உதயகுமார் எம்.பி., முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் யாகப்பன், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பேரூர் செயலாளர்கள் தண்டபாணி, சேகர், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி மற்றும் அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்