நிலக்கோட்டை அருகே, மினி வேன் மோதி 19ஆடுகள் பலி
நிலக்கோட்டை அருகே மினி வேன் மோதி 19 ஆடுகள் பலியானது.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை அடுத்த லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 37). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை 6 மணி அளவில் வத்தலக்குண்டு-பெரியகுளம் ரோட்டில் மணியகாரன்பட்டி கருப்புசாமி கோவில் அருகே நிலக்கோட்டை நோக்கி 52 ஆடுகளை ஓட்டி வந்தார். அப்போது பள்ளப்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற ஒரு மினி வேன் ஆடுகள் மீது மோதியது. அப்போது அந்த வேன் டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 19 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது. 11 ஆடுகள் காயம் அடைந்தன. முருகன் அதிர்ஷ்டவசமாக தப்பித்துக்கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதிகாலையிலேயே நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.