போலீசார் என கூறி காதல் ஜோடிகளிடம் பணம் பறித்து வந்த 2 பேர் கைது

போலீசார் என கூறி,காதல் ஜோடிகளிடம் பணம் பறித்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2019-04-09 23:01 GMT
மும்பை, 

மும்பையை சேர்ந்த வியாபாரி ஒருவர் கடந்த மாதம் 24-ந் தேதி ஒரு பெண்ணுடன் மலாடு மேற்கு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து வியாபாரி வெளியே வந்தபோது அங்கிருந்த 3 பேர் வழிமறித்தனர். இதில் தாங்கள் போலீஸ்காரர்கள் எனவும், பெண்ணுடன் ஓட்டலில் தங்கியது குறித்து உங்கள் மனைவியிடம் தகவல் தெரிவிக்க போகிறோம் என மிரட்டினர்.

அவ்வாறு செய்ய வேண்டாமெனில் ரூ.20 ஆயிரம் தரும்படி கேட்டனர். இதனால் பயந்து போன வியாபாரி தன்னிடம் இருந்த ரூ.12 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்தார்.

இந்தநிலையில், அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வியாபாரி இதுபற்றி மலாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், வியாபாரியிடம் பணம் பறித்தது போலி போலீசார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பணம் பறித்த கும்பலை சேர்ந்த 2 பேர் அங்கு நிற்பதை ஓட்டல் மேலாளர் கண்டார். இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் நாலச்சோப்ராவை சேர்ந்த சந்தேஷ் மதல்கர்(வயது44), கோட்பந்தர் ரோடு பகுதியை சேர்ந்த சச்சின் காராவி (37) என்பது தெரியவந்தது.

இது வரையில் அவர்கள் 10 காதல் ஜோடிகளிடம் பணம் பறித்ததாக தெரிவித்தனர். இதில், தொடர்புடைய மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்