மோடிக்கு தலை வணங்காத ஒரே கட்சி அ.ம.மு.க. பரமக்குடியில் டி.டி.வி.தினகரன் பேச்சு

மோடிக்கு தலைவணங்காத ஒரே கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்று பரமக்குடியில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

Update: 2019-04-09 23:15 GMT

பரமக்குடி,

அ.ம.மு.க. சார்பில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வது.ந.ஆனந்த், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் டாக்டர் முத்தையா ஆகியோரை ஆதரித்து பரமக்குடி ஐந்துமுனை பகுதியில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– மிகுந்த எழுச்சியோடு இளைய சமுதாயங்களின் கூட்டம் கூடியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை முதல்–அமைச்சராக ஆக்கியதற்கு 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் தண்டனை கொடுத்துள்ளார். துரோகத்தை பற்றி யார் பேசுவது? என தெரியவில்லை. கடந்த 2017 பிப்ரவரி 18–ந்தேதி ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு ஓ.பன்னீர்செல்வம் ஓட்டு போட்டார். இவர் துரோகத்தை பற்றி பேசுகிறார். தமிழ் அகராதியில் துரோகம் என்றால் இபிஎஸ்–ஓபிஎஸ் படங்களை போட்டாலோ போதும். கொங்கு மண்டலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு முருகன் பெயரைத்தான் வைப்பார்கள். ஆனால் தற்போது பழனி, சாமி என்று தான் வைப்போம். பழனிச்சாமி என்று பெயர் வைக்கமாட்டோம் என்று கூறுகின்றனர்.

டாக்டர் முத்தையா ஆளுங்கட்சியில் இருந்திருந்தால் பல கோடிக்கு அதிபதியாகி இருப்பார். ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிட்டபோது தொப்பி சின்னத்திலும், தினகரன் என்ற பெயரிலும் நிறைய பேரை போட்டியிட செய்தனர். அதேபோல தற்போதும் வேட்பாளர்கள் பெயரிலும், பரிசு பெட்டி சின்னத்தை போன்றும் பலரை போட்டியிட வைத்துள்ளனர்.

நம்பியார் காலத்து பார்முலா எல்லாம் இப்போது எடுபடாது. தி.மு.க. கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணி என மு.க.ஸ்டாலின் கூறிக்கொண்டு யாரை ஏமாற்றுகிறார்? ஆர்.கே.நகர் தொகுதியில் அவர்களுக்கு டெபாசிட் போய் விட்டது. வீரமணி கிருஷ்ணரை பற்றி தவறாக பேசுகிறார். தி.மு.க. கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணி அல்ல. சந்தர்ப்பவாத கூட்டணி. 8 வழிச்சாலை திட்டத்தை முதலில் நாங்கள் தான் எதிர்த்தோம். ஆனால் மு.க.ஸ்டாலின் அதனை ஆதரித்தார். அதற்கு காரணம் மோடி, அமித்ஷா மீதுள்ள பயம்தான். அ.ம.மு.க. தொண்டர்கள் உத்வேகம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் தொகுதியில் வது.ந.ஆனந்தும், பரமக்குடி தொகுதியில் டாக்டர் முத்தையாவும் வெற்றி பெறாவிட்டால் தமிழகத்தில் எந்த தொகுதியில் அ.ம.மு.க. வெற்றி பெறப்போகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க. கோட்டையாக இருந்தவையெல்லாம் இப்போது அ.ம.மு.க. கோட்டையாகி விட்டது. பொது செயலாளர் சசிகலா சொன்னதால் டாக்டர் முத்தையா எடப்பாடிக்கு வாக்களித்து பதவியை இழந்து நிற்கிறார். அ.தி.மு.க. 18 தொகுதியில் ஒன்று கூட ஜெயிக்க முடியாது. 8 தொகுதிகளில் ஜெயிக்காவிட்டால் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பழைய தொழிலுக்கு போக வேண்டியது தான்.

அ.ம.மு.க. மக்களை நம்பி உள்ளது. அ.தி.மு.க. பண மூட்டையை நம்பி உள்ளது. இரட்டை இலை சின்னம் துரோகிகள் கையில் இருப்பதால் எம்.ஜி.ஆர். தொகுதியில் கூட இரட்டை இலையை தோற்கடிக்க போகிறோம். துரோகிகளும், துரோகமும் ஜெயித்ததாக வரலாறு இல்லை. சாதி, மதத்தை பற்றி பேச அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை. சாலை வசதி, தண்ணீர் வசதி ஆகியவற்றை பற்றி பேசாமல் மு.க.ஸ்டாலின் எதைஎதையோ பற்றி பேசுகிறார். பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் முத்தையா கடந்த முறை பெற்ற வாக்குகளை விட இம்முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். நாங்கள் யாரோடும் எப்போதும் சமரசம் செய்ய மாட்டோம்.

மோடியிடம் தலைவணங்காத ஒரே கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான். அனைவருக்கும் காவலராகவும், தோழராகவும் இருப்போம். பொது நல அமைப்பாக செயல்படுவோம். தமிழகம் தலைநிமிர, தமிழர் வாழ்வு மலர பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்களியுங்கள். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் கொடுத்தார். அதனாலேயே இந்த சின்னத்தை நாங்கள் தேர்வு செய்துள்ளோம். பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி, வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும்.

பரமக்குடி பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும். நெசவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரிபேட் பாக்கி உடனடியாக வழங்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் திட்டங்களை செயல்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்