அன்பில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2019-04-09 22:30 GMT
லால்குடி,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டத்தையொட்டி கடந்த மாதம் 17-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அன்று முதல் மாரியம்மன் உலக மக்கள் நலனுக்காக 15 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார் என்பது ஐதீகம். இந்த நாட்களில் அம்மனுக்கு அரிசி, துள்ளுமாவு, இளநீர் மட்டுமே நிவேதனம் செய்யப்படுகிறது.

கடந்த மாதம் 31-ந் தேதி பங்குனி தேரோட்டத்திற்கான கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தொடர்ந்து 10 நாட்கள் அம்மன் கமலம், சிம்மம், காமதேனு, மயில், ரிஷபம், கண்ணாடி பல்லக்கு, அன்னம் ஆகிய வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தையொட்டி லால்குடி, அன்பில் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் பலர் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். லால்குடியில் இருந்து அன்பில் வரை ஆங்காங்கே பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்