‘சமரச தீர்வு மையத்தின் மூலம் நட்புரிமை ஏற்படும்’ மாவட்ட நீதிபதி சரோஜினிதேவி பேச்சு

சமரச தீர்வு மையத்தின் மூலம் நட்புரிமை ஏற்படும் என்று மாவட்ட நீதிபதி சரோஜினிதேவி பேசினார்.

Update: 2019-04-09 22:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச தீர்வு மையத்தின் 14-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இம்மையம் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று காலை நடைபெற்றது.

முகாமிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சரோஜினிதேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாவட்ட நீதிபதி சரோஜினிதேவி பேசியதாவது:-

சமரச தீர்வு மையத்தின் மூலம் சிவில், குடும்பநல மற்றும் கிரிமினல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணலாம். ஏதேனும் வழக்கிற்காக நீதிமன்றத்தை அணுகும்போது ஒருவருக்கு சாதகமாகவும், இன்னொருவருக்கு பாதகமாகவும்தான் தீர்ப்பு அமைகிறது. வழக்கு முடியவும் கால விரயம் ஏற்படுகிறது. சமரச தீர்வு மையத்தை அணுகினால் விரைவில் தீர்வு ஏற்படக்கூடும்.

உதாரணமாக நிலத்தகராறு சம்பந்தமாக சமரச தீர்வு மையத்தை அணுகும்போது இருவருக்கும் பாதகம் ஏற்படாமல் பேசி தீர்வு காணப்படும். அதுபோல் விவாகரத்து வழக்கிலும் கணவன்-மனைவி இருவரிடமும் பேசி குறை, நிறைகளை நிவர்த்தி செய்து அவர்கள் கடைசி வரை சந்தோஷமாக வாழ இந்த மையம் வழிவகுக்கிறது. இப்படி பல்வேறு பிரச்சினைகளை சமரச தீர்வு மையத்தின் மூலம் உடனுக்குடன் தீர்வு காணலாம்.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல வழக்குகளை இந்த சமரச மையத்தின் மூலம் தீர்ப்பதனால் இரு தரப்புக்கும் வெற்றி காணக்கூடிய சூழல் ஏற்படுகிறது. இந்த சமரச மையம் மூலம் செலவும் மிச்சம், கால விரயமும் கிடையாது. ஒருவருக்கொருவர் பகைமை உணர்வுகளை மறந்து நட்புரிமை ஏற்படும். விரோதம் இல்லாமல் நல்ல உறவு முறையுடன் இருக்கக்கூடிய சூழலை இந்த சமரச மையத்தின் மூலம் ஏற்படுத்த முடியும். ஆகவே பொதுமக்கள் இந்த சமரச மையத்தை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த முகாமில் நீதிபதிகள் ஜமுனா, ஜெயமங்கலம், காந்தி, அருணாச்சலம், காஞ்சனா, பிரியா, கவிதா, மும்தாஜ், விழுப்புரம் சட்டக்கல்லூரி முதல்வர் முருகேசன், சமரச தீர்வு மைய உறுப்பினர் ராஜாராம், அரசு வக்கீல் சீனிவாசன், வக்கீல் சங்க தலைவர்கள் சகாதேவன், தமிழ்செல்வன், ஸ்ரீதர் உள்பட வக்கீல்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்