தூத்துக்குடி அருகே வாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு 2 பேருக்கு வலைவீச்சு
தூத்துக்குடி அருகே வாலிபரை கத்தியால் குத்திவிட்டு செல்போன் பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் சோரீஸ்புரம் மாதவன்நகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் வள்ளிராஜா (வயது 26). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று காலையில் தூத்துக்குடி அருகே உள்ள துரைக்கனி நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.
அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த மர்ம நபர்கள் 2 பேர் வள்ளிராஜாவை வழிமறித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை கேட்டுள்ளனர். ஆனால் அவர் செல்போனை கொடுக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் வைத்து இருந்த கத்தியால் வள்ளிராஜாவை குத்திவிட்டு அவரின் செல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த வள்ளிராஜா, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.