செங்கம் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி கொண்டு வர முயற்சி எடுப்பேன் அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்குறுதி

செங்கம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வர முயற்சி எடுப்பேன் என அ.தி.மு.க.வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்தார்.

Update: 2019-04-09 22:30 GMT
செங்கம்,

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 6 சட்டமன்ற தொகுதியில் அடங்கியுள்ள கிராமங்களில் வீதி வீதியாக சென்று பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று அவர் செங்கம் பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், திருவண்ணாமலை அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் காளிதாஸ், தேர்தல் பிரசார பிரிவு துணை செயலாளர் எதிரொலிமணியன், பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் ஜானகிராமன், பிரசாத், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு, பா.ஜ.க. மாவட்ட தலைவர் எஸ்.நேரு, த.மா.கா. கொள்கை பரப்பு செயலாளர் அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனை தொடர்ந்து செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட செ.நாச்சிபட்டு, ஆணைமங்கலம், தோக்கவாடி மற்றும் செங்கம் நகரில் மெயின்ரோடு, ராஜவீதி, மண்மலை, அன்வராபாத், குயிலம், புதுப்பட்டு, பரமணந்தல், கொட்டையூர், குப்பநத்தம் ஆகிய கிராமங்களிலும், திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்தியந்தல் ஆணாய்பிறந்தான், பண்டிதப்பட்டு, மெய்யூர், நாச்சானந்தல், அழகானந்தல், மேலத்திக்கான் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டு தீவிர பிரசாரம் செய்தார். அப்போது வழிநெடுகிலும் அவருக்கு பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தின்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “செங்கத்தில் முடக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். செங்கம் நகருக்கு புறவழிச்சாலை வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவேன். நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் உள்ள திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஜோலார்பேட்டை, செங்கம், திருவண்ணாமலை, திண்டிவனம் வழியாக புதுச்சேரிக்கு ரெயில் சேவையை தொடங்க விரைவாக நடவடிக்கை மேற்கொள்வேன்.

செங்கம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வருவேன். பஸ் நிலையம் மேம்படுத்தப்படும். செங்கம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை ‘மல்டி பெஷாலிட்டி’ மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குப்பநத்தம் அணையை தூர் வாரி சுற்றுலா தலமாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பேன். போளூரில் இருந்து செங்கம் வழியாக பெங்களூருவுக்கு பைபாஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், வனரோஜா எம்.பி., தலைமைக் கழக பேச்சாளர் அமுதாஅருணாச்சலம், மகரிஷி.மனோகரன், பத்மாமுனிகண்ணு, வழக்கறிஞர் செல்வம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்