மாற்றுமுறை தீர்வு மையம் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு நிரந்தர தீர்வு விழாவில் முதன்மை நீதிபதி பேச்சு

மாற்றுமுறை தீர்வு மையம் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி தெரிவித்தார்.;

Update: 2019-04-09 22:15 GMT
வேலூர்,

தமிழகத்தில் மாற்றுமுறை தீர்வு மையம் தொடங்கி 14 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மையத்தில் 14-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான எஸ்.ஆனந்தி தலைமை தாங்கினார். சார்பு நீதிபதி தாமோதரன் வரவேற்றார். குடும்பநல நீதிபதி லதா, தொழிலாளர் நீதிபதி செல்வசுந்தரி, மகளிர் கோர்ட்டு நீதிபதி செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.ஆனந்தி பேசியதாவது:-
மாற்றுமுறை தீர்வு மையம் தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிறது. வழக்கறிஞர்கள் அனைவரும் நிறைய வழக்குகளை இம்மையத்துக்கு அனுப்பி வைக்க முயற்சி எடுக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் நிலுவையில் உள்ள 176 வழக்குகள் மாற்றுமுறை தீர்வு மையத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சமரசம் மூலம் 17 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது 10 சதவீதம் ஆகும்.

இந்த மாற்றுமுறை தீர்வு மையம் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரசம் ஏற்படுத்தப்பட்டு நிரந்தர தீர்வு வழங்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராம மக்கள் இதுகுறித்து அறியாமல் உள்ளனர். அவர்களுக்கு இதுகுறித்த தகவலை கொண்டு சேர்க்க வேண்டும்.

மாற்றுமுறை தீர்வு மையம் குறித்து அரசு மருத்துவமனை, உழவர் சந்தை, ரெயில்வே நிலையம், பஸ் நிலையம், சினிமா தியேட்டர் போன்ற பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் மாற்றுமுறை தீர்வு மைய உறுப்பினர் ஆனந்தன் நன்றி கூறினார்.

இதே போல மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா நீதிமன்றங்களிலும் இந்த விழா நடந்தது.

மேலும் செய்திகள்