217 மலிவு விலை வீடுகளுக்கு ஜூன் 2-ந் தேதி குலுக்கல் : மகாடா அறிவிப்பு
செம்பூர், பவாயில் கட்டப்பட்டு உள்ள 217 மலிவு விலை வீடுகளுக்கு ஜூன் 2-ந் தேதி குலுக்கல் நடைபெறும் என மகாடா அறிவித்து உள்ளது.
மும்பை,
மராட்டிய வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியமான மகாடா பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் முதல் உயர் வருமானம் கொண்டவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அடுக்குமாடி கட்டிடங்களில் வீடுகளை கட்டி குலுக்கல் முறையில் பயனாளிகளை தேர்வு செய்து விற்பனை செய்து வருகிறது.
தற்போது செம்பூர் மற்றும் பவாயில் கட்டி உள்ள 217 வீடுகளை மகாடா விற்பனை செய்ய உள்ளது. இவற்றில் 46 வீடுகள் பவாயிலும், மற்றவை செம்பூர் சங்கர் நகரிலும் உள்ளன. 47 வீடுகள் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கும், மற்றவை குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்த வீடுகளின் விலை ரூ.31 லட்சத்து 54 ஆயிரம், ரூ.39 லட்சத்து 46 ஆயிரம் மற்றும் ரூ.56 லட்சத்து 73 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
இந்த வீடுகளை வாங்குவதற்காக மும்பைவாசிகள் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 36 ஆயிரத்து 901 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த வீடுகளுக்கான குலுக்கல் வருகிற 21-ந் தேதி நடைபெறும் என மகாடா அறிவித்து இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து, 217 வீடுகளுக்கான குலுக்கலை மகாடா ஒத்தி வைத்தது.
இந்தநிலையில், 217 மலிவு விலை வீடுகளுக்கான குலுக்கல் ஜூன் 2-ந் தேதி நடைபெறும் என மகாடா தலைவர் மதுசவான் தெரிவித்து உள்ளார்.
மலிவு விலை வீடுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 13-ந் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இது மே 24-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.