தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புனேயில் 42 பேர் கைது
தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புனேயில் இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புனே,
மராட்டியத்தில் வருகிற 11, 18, 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 4 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தலின் போது அசம்பாவிதங்கள் நடந்து விடாமல் இருப்பதற்காக அரசியல் கட்சியினருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கருதப்படும் குற்ற பின்னணி உடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதில், புனே மாவட்டத்தில் இதுவரை 42 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து 10 துப்பாக்கிகள், 4 நாட்டு துப்பாக்கிகள், 20 வாள்கள், 8 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஆயுதங்கள் அதிகபட்சமாக மாவல், சிரூர், பாராமதி ஆகிய தொகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக புனே போலீஸ் சூப்பிரண்டு சந்தீப் பாட்டீல் கூறினார்.