இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது: 2-வது கட்ட தேர்தலில் 237 வேட்பாளர்கள் போட்டி

கர்நாடகத்தில் 2-வது கட்ட தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 237 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதிகபட்சமாக பெலகாவியில் 57 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

Update: 2019-04-08 22:54 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக வருகிற 18 மற்றும் 23-ந் தேதிகளில் நடக்கிறது. பெங்களூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வருகிற 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் 241 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. அதாவது சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, கலபுரகி, ராய்ச்சூர், பீதர், கொப்பல், பல்லாரி, ஹாவேரி, தார்வார், உத்தர கன்னடா, தாவணகெரே, சிவமொக்கா ஆகிய தொகுதிகளில் 2-வது கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இந்த 14 தொகுதிகளில் வருகிற 23-ந் தேதி நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம்(மார்ச்) 28-ந் தேதி தொடங்கி கடந்த 4-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 311 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

2-வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் முக்கியமாக கலபுரகியில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, உத்தர கன்னடா தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

மனுக்கள் பரிசீலனையின்போது, 29 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 282 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். அதன் பிறகு 45 பேர் தங்களின் மனுவை வாபஸ் பெற்றனர்.

மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். இதையடுத்து நேற்று மாலை இறுதி வேட்பாளர் படடியல் வெளியிடப்பட்டது. அதன்படி 2-வது கட்ட தேர்தலில் 237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக பெலகாவி தொகுதியில் மட்டும் 57 பேர் போட்டியிடுகிறார்கள்.

காங்கிரஸ், பா.ஜனதா, நடிகர் உபேந்திராவின் உத்தம பிரஜாகிய கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், இந்திய குடியரசு கட்சி ஆகிய 5 கட்சிகளை தவிர மீதமுள்ள 52 பேர் சுயேச்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தேர்தல் களத்தில் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்தபட்சமாக ராய்ச்சூர் தொகுதியில் 5 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். 237 வேட்பாளர்களில் 10 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் 28 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 478 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

மேலும் செய்திகள்