சேலத்தில் வாகன சோதனையில் ரூ.5¾ லட்சம் பறிமுதல்
சேலத்தில் வாகன சோதனையின் போது ரூ.5¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் மதுபாட்டில்கள், சேலைகள், தங்கம், வெள்ளி பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு அவை கருவூலங்களில் சேர்க்கப்பட்டு வருகின்றன. உரிய ஆவணங்கள் காண்பித்த பின்பு பறிமுதல் செய்யப்பட்டவை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
சேலம் வின்சென்டில் உள்ள அரசு கலைக்கல்லூரி பகுதியில் வடக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். இந்த குழுவினர் அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்து சோதனை செய்து வந்தனர். அப்போது ஒரு காரை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஏற்காடு மெயின்ரோடு சுந்தரா கார்டன் பகுதியை சேர்ந்த வசந்த் என்பவர் இருந்தார்.
அவருடைய காரில் ரூ.5 லட்சத்து 76 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அவரிடம் இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என கேட்டனர். அதற்கு வசந்த் ஆவணங்களை வீட்டில் வைத்திருப்பதாக கூறினார். இதைக்கேட்ட அதிகாரிகள் ஆவணங்களை காண்பித்து விட்டு பணத்தை பெற்றுச்செல்லுமாறு தெரிவித்தனர். இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் செழியனிடம் ஒப்படைத்தனர்.