அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் சொத்துகளின் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் சொத்துகளின் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை பரவை வடக்கு வாசல் பகுதியில் செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலின் 2 ஏக்கர் நிலம் தனியாரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த நிலத்தை மீட்க வேண்டும். சொத்துப்பட்டியலின் மூல ஆவணம் எனப்படும் இனாம் பதிவேடுகள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த கோவில் சொத்துகளையும், மற்ற கோவில் சொத்துக்களையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், “தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் சொத்துகளும் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் தான் உள்ளன. இந்த மூல ஆவணங்கள் அடிப்படையில் அந்த நிலங்களை அளந்தால் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளனவா என்று தெரியவரும்“ என்று கூறப்பட்டது.
விசாரணை முடிவில், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் சொத்துகளின் இனாம் ஆவணங்களை, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மதுரை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.
தவறினால் வருவாய்த்துறை செயலாளர், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 24–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.