ஆலங்குளம் ஒன்றியத்தில் “அனைத்து கிராமங்களுக்கும் தரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன்” அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பிரசாரம்
“ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன்” என அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பிரசாரம் செய்தார்.
ஆலங்குளம்,
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் நேற்று ஆலங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். குருவன்கோட்டை, கீழபட்டமுடையார்புரம், குறிப்பன்குளம், சண்முகாபுரம், மருதபுரம், மாயமான்குறிச்சி, நாரணாபுரம், அகரம், கிடாரகுளம், கடங்கநேரி, வென்னிலிங்கபுரம், காவலாகுறிச்சி, ரெட்டியார்பட்டி, நெட்டூர், நல்லூர் ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
அப்போது வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேசியதாவது:-
ஜெயலலிதாவின் ஆசி பெற்ற இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். அனைத்து ஓட்டுகளையும் அ.தி.மு.க.வுக்கு அளித்து, அ.தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்தால் உங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் பூர்த்தி செய்வேன். ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன். நீங்கள் என்னிடம் உரிமையுடன் உங்கள் தேவைகளை கேட்கலாம். நானும் உங்களுக்காக உண்மையாக உழைப்பேன். சேரன்மாதேவி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது நான் செய்த பணிகளை அந்த தொகுதி மக்களிடம் கேட்டுப் பாருங்கள். உங்களுக்காக உண்மையாக உழைக்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் கடையம் யூனியனுக்கு உட்பட்ட ஆழ்வார்குறிச்சி, செட்டிகுளம், சம்பன்குளம், சிவசைலம், கருத்தபிள்ளையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார்.
நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் பிரபாகரன், விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், மாவட்ட அவை தலைவர் வீரபாண்டியன், ஆலங்குளம் நகர செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் கணேசன், குருவன்கோட்டை கிளை செயலாளர் கப்பல் என்ற கார்த்திகேயன், இணை செயலாளர் பர்வீன்ராஜ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் முருகேசன், கடையம் ஒன்றிய செயலாளர் அருவேல்ராஜன், நகர செயலாளர் சங்கர், ராஜவேல், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் வடிவேல் முருகன், இளங்கோ, ராமதுரை மற்றும் பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.