தேர்வில் தோல்வியால் பரிதாபம்: கல்லூரி மாணவர் தற்கொலை

தேர்வில் தோல்வி அடைந்ததால் தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2019-04-08 21:45 GMT
தூத்துக்குடி,

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளி. இவருடைய மகன் மாயாண்டி (வயது 20). இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரியில் நடந்த தேர்வில் சில பாடங்களில் மாயாண்டி தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த மாயாண்டி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மகன் பிணமாக தொங்கியதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அலறினார்கள்.

இதுகுறித்து உடனடியாக தாளமுத்து நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மாயாண்டி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்