அதிகாலையில் நடைபயிற்சி சென்ற 2 பேர் வாகனம் மோதி பலி

சிவகங்கை அருகே அதிகாலையில் நடைபயிற்சி சென்ற 2 பேர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தனர்.

Update: 2019-04-08 21:45 GMT

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்துள்ள காமராஜர் காலனியை சேர்ந்தவர்கள் பெருமாள் (வயது 60) மற்றும் மலைச்சாமி (55). இவர்கள் இருவரும் தினமும் வீட்டின் அருகில் உள்ள புறவழிச்சாலையில் அதிகாலையில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். அப்போது இருவரும் ஒன்றாக சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பவது வழக்கம்.

வழக்கம் போல நேற்றும் இவர்கள் அதிகாலையில் இருவரும் வீட்டை விட்டு புறப்பட்டு, புறவழிச்சாலை பகுதியில் நடைபயிற்சி சென்றனர். அவர்கள் புறவழிச்சாலை பகுதியின் ரோடு ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. அதில் 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர், நகர் இன்ஸ்பெக்டர் அழகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்