6 சட்டமன்ற தொகுதிகளுக்கு 2-ம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு 2-ம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணியை தேர்தல் பொது பார்வையாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

Update: 2019-04-08 22:45 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஊத்தங்கரை தொகுதியில் 287 வாக்குச்சாவடிகளும், பர்கூர் தொகுதியில் 292 வாக்குச் சாவடிகளும், கிருஷ்ணகிரி தொகுதியில் 307 வாக்குச்சாவடிகளும், வேப்பனப்பள்ளி தொகுதியில் 301 வாக்குச்சாவடிகளும், ஓசூர் தொகுதியில் 364 வாக்குச்சாவடிகளும், தளி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,850 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 2-ம் கட்டமாக கணினியில் ரேண்டம் முறையில் பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளை தேர்தல் பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே, ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் கல்யாண் சந்த் ஷமன், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் எஸ்.பிரபாகர் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பொது பார்வையாளர்கள் ராம்ராவ் போன்ஸ்லே, கல்யாண் சந்த் ஷமன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் பிரபாகருடன் ஆய்வு செய்தனர்.

அதைத் தொடர்ந்து தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு செலுத்துவதற்கு அறை எண் 69-ல் சீல் வைக்கப்பட்டுள்ள பெட்டி மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தனர். மேலும் தேர்தல் விதிமுறைகள் குறித்து புகார் தெரிவிக்கும் மையத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக தரை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன அனுமதி வழங்குவது, பொதுக்கூட்டம் நடத்துவது மற்றும் ஊர்வலம் நடைபெற அனுமதி குறித்து விவர பதிவேடுகளையும் தேர்தல் பார்வையாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்