காங்கிரசின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு ஜி.கே.வாசன் பேட்டி

காங்கிரசின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டாக தான் உள்ளது என்று கரூரில் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

Update: 2019-04-08 23:15 GMT
கரூர்,

காங்கிரஸ் - தி.மு.க. அணியை பொறுத்தவரையில் வேஷம் போட்டு கோஷம் போடும் அணியாக தான் திகழ்கிறது. ஆளுங்கட்சி மீது எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாத குற்றச்சாட்டினை முன்வைத்தே காங்கிரஸ்-தி.மு.க. பிரசாரம் மேற்கொண்டு வருவதை மக்கள் நம்ப தயாராக இல்லை. குற்றம் சொல்லக்கூடியவர்கள் நேர்மையானவரா? ஊழல் கறைபடியாதவரா? என்பதை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். இந்த வகையிலான காங்கிரஸ்-தி.மு.க. பிரசாரம் மக்களிடையே எடுபடாது.

காமராஜர் ஆட்சியே எங்களது லட்சியம்

வருமானவரித்துறை என்பது அரசை தாண்டிய ஒரு துறை. யார் எப்படி செயல்படுகிறார்கள்? என்கிற கண்காணிப்பின் அடிப்படையிலேயே அவர்கள் சோதனை நடத்துகின்றனர். அவர்களிடம் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்கிற பாகுபாடில்லை. பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி வீட்டில் கோடி கோடியாக பணம் உள்ளது என கண்மூடித்தனமாக குற்றம் சாட்டுவது என்பது எதிர்கட்சிக்கு (தி.மு.க.) பழக்கமாகி விட்டது. இதை வைத்து மக்களை முட்டாள் ஆக்க முயன்றால் அவர்கள் தங்களது வாக்குகள் மூலம் எதிர்கட்சிகளை கோமாளியாக ஆக்கி விடுவார்கள். தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே எங்களது லட்சியம்.

செல்லாத நோட்டு

காங்கிரசின் தேர்தல் அறிக்கையானது மக்களிடம் நம்பகத்தன்மையை பெற முடியாமல் செல்லாத நோட்டாக தான் உள்ளது. தங்களது முந்தைய ஆட்சி காலத்தில் கொடுக்க முடியாத திட்டங்களையெல்லாம், தற்போது கொடுப்பேன் என கூறுவது கண்கெட்ட பிறகு சூர்யநமஸ்காரம் செய்வதை போல் உள்ளது. மீண்டும் ஆட்சி சுகத்தை அனுபவிக்க துடிக்கும் வகையில் தான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி காமராஜர் சிலை முன்பு ஜி.கே.வாசன் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசும்போது, நம் பாரத தேசம் பிரதமர் மோடியிடம் பாதுகாப்பாக உள்ளது. மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சி, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடை பெறுகிறது. ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டிய எதிர்கட்சிகள் எதிரி கட்சிகளாக செயல்படுகின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி மலரவேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்ற முடியும். அதற்கு அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்து, அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள் என்றார்.இந்த பிரசாரத்தின் போது, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், த.மா.கா. மாவட்ட நிர்வாகிகள் ரவீந்திரன், தர்மராஜ், சங்கேந்தி தியாகராஜன், ஒன்றிய செயலாளர் புள்ளம்பாடி ராஜாராம், லால்குடி சூப்பர் நடேசன் மற்றும் பலர் உடன் சென்றனர். 

மேலும் செய்திகள்