தர்மபுரி அருகே சுங்கச்சாவடியில் இருந்து வங்கியில் செலுத்த கொண்டு சென்ற ரூ.1 கோடி பறிமுதல்

தர்மபுரி அருகே சுங்கச்சாவடியில் இருந்து வங்கியில் செலுத்துவதற்காக வேனில் கொண்டு சென்ற ரூ.1¼ கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-04-08 23:15 GMT
நல்லம்பள்ளி, 

தர்மபுரி அருகே நல்லம்பள்ளியை அடுத்த சேஷம்பட்டி பகுதியில் சிப்காட் தாசில்தார் அழகுசுந்தரம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த வேனுக்குள் இருந்த பெட்டியில் 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் ரூ.1 கோடியே 24 லட்சத்து 77 ஆயிரத்து 781 அந்த வேனில் இருந்தது. இதுதொடர்பாக அந்த வேனில் வந்த தொப்பூர் சுங்கச்சாவடி தனியார் நிறுவன ஏஜென்சி பணியாளர் தர்மபுரி மாவட்டம் கொண்டநாயக்கன்அள்ளியை சேர்ந்த பெரியசாமி (வயது32), வேன் டிரைவர் சுந்தரமூர்த்தி, பாதுகாவலர் லட்சுமணன் ஆகிய 3 பேரிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இதில், தொப்பூர் சுங்கச்சாவடியில் வசூலான பணத்தை தனியார் ஏஜென்சி ஊழியர்களான இவர்கள் தர்மபுரியில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து பணத்தை எடுத்து செல்வதற்குரிய ஆவணங்களை பறக்கும் படை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து தர்மபுரி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

அங்கு தாசில்தார் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பணத்தை எடுத்து வந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். வேனில் கொண்டு வரப்பட்ட பணத்திற்குரிய முறையான ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற்று செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். அதன்பிறகு அந்த பணம் தர்மபுரி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பறக்கும் படை சோதனையில் ரூ.1 கோடியே 24 லட்சத்து 77 ஆயிரத்து 781 சிக்கியது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுங்கச்சாவடியில் இருந்து வங்கியில் செலுத்த வேனில் கொண்டு சென்ற பணம் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்