கும்மிடிப்பூண்டி அருகே ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.80 லட்சம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஏ.டி.எம்.மில் நிரப்ப வேனில் கொண்டு சென்ற ரூ.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-04-08 22:45 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொம்மாஜிகுளம் என்ற இடத்தில் கவரைப்பேட்டை-சத்யவேடு சாலையில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் நேற்று இரவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கவரைப்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் சத்யவேடு நோக்கி சென்ற மினி வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக தனியார் நிறுவனம் மூலம் ரூ.80 லட்சம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அந்த வேனில் டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர். ஆனால் பணத்திற்கான ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து பணத்தை போலீசார் வேனுடன் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த வேனை கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி தலைமையில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான சுரேஷ்பாபு, கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் கும்மிடிப்பூண்டி கருவூலத்தில் பணம் ஒப் படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்