மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி

மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது.

Update: 2019-04-08 22:00 GMT

மஞ்சூர்,

மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தேயிலை தோட்டங்களை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகின்றன. குறிப்பாக மஞ்சூர் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியை விட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகும் சிறுத்தைப்புலிகள் கால்நடைகளை அடித்து கொன்று அட்டகாசம் செய்கின்றன. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மஞ்சூர் அருகே ஒணிகண்டியில் இருந்து கீழ்குந்தா செல்லும் சாலையோரத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் சரவணக்குமார் தலைமையில் குந்தா வனச்சரகர் சரவணன், வனவர் ரவிக்குமார், வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், கண்ணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கால்நடை டாக்டர் சிவசங்கரன் வரவழைக்கப்பட்டு, இறந்து கிடந்த சிறுத்தைப்புலியின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து உடல் அங்கேயே தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்து கிடந்தது 3 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தைப்புலி ஆகும். இது இறந்து 10 நாட்களுக்கு மேல் இருக்கும். உடற்கூறு பாகங்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றனர்.

மேலும் செய்திகள்