இந்தியாவை வல்லரசாக்கும் தன்மை பா.ஜனதாவுக்கு உண்டு ஜி.கே.வாசன் பிரசாரம்

இந்தியாவை வல்லரசாக்கும் தன்மை பா.ஜனதாவுக்கு உண்டு என ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2019-04-08 23:15 GMT
பேராவூரணி,

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு ஆட்டோ சின்னத்தில் வாக்கு கேட்டு பேராவூரணி அண்ணாசிலை அருகே த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பா.ஜனதா ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நாடு படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. குறைகளை நிறைகளாக மாற்றக்கூடிய வகையில் பா.ஜனதா ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்தியாவை நல்லரசாக மட்டுமல்ல, வல்லரசாகவும் மாற்றும் தன்மை பா.ஜனதாவுக்கு உண்டு.

அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதே நிலை தொடர வேண்டும் என்றால், தமிழகத்தில் நடக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அ.தி.மு.க. கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சிறுபான்மை மக்களின் நலனைப்பற்றி தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. தமிழக முதல்-அமைச்சர் தஞ்சையில் இருந்து சேதுபாவாசத்திரம் வரை நான்கு வழிச்சாலை அமைத்து தரப்படும் என உறுதி அளித்துள்ளார். நானே இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என நினைத்து ஆட்டோ சின்னத்துக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்