தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்து கன்றுக்குட்டியை புலி அடித்துக்கொன்றது பொதுமக்கள் அச்சம்

தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்து கன்றுக்குட்டியை புலி அடித்துக்கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.

Update: 2019-04-08 22:15 GMT

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஆசனூர், சத்தியமங்கலம், தலமலை, கேர்மாளம், பவானிசாகர், டி.என்.பாளையம் என மொத்தம் 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, மான், சிறுத்தை, புலி, கரடி என ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன.

தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் விலங்குகள் தண்ணீரைத்தேடி காட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. மேலும் அங்குள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள திகினாரை கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் என்கிற சுப்பிரமணியம். விவசாயி. இவர் தன்னுடைய வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்தில் கொட்டகை அமைத்து மாடுகள், கன்றுக்குட்டிகள் வளர்த்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் கொட்டகையில் கட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை கொட்டகையில் இருந்து மாடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் தூக்கம் கலைந்து எழுந்த கணேஷ் டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு மாட்டுக்கொட்டகைக்கு ஓடினார். பின்னர் கொட்டகைக்குள் டார்ச் லைட் அடித்து பார்த்தார்.

அப்போது புலி ஒன்று கொட்டகையில் கட்டியிருந்த ஒரு கன்றுக்குட்டியை அடித்துக்கொன்றது. பின்னர் வாயில் கவ்வியபடி தரதரவென இழுத்துச்சென்றுகொண்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பயந்துபோய் வீட்டுக்குள் ஓடிவிட்டார்.

பின்னர் காலையில் அக்கம் பக்கத்து விவசாயிகளை அழைத்துக்கொண்டு கொட்டகைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் புலி இழுத்துச்சென்ற கன்றுக்குட்டியின் உடல் கிடந்தது. வயிற்றை கிழித்து இறைச்சியை தின்றுவிட்டு புலி காட்டுக்குள் சென்றுவிட்டது தெரிந்தது.

இதுபற்றி கணேஷ் உடனே தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் மாட்டுக்கொட்டகையிலும், கன்றுக்குட்டியின் உடல் கிடந்த இடத்தின் அருகேயும் காணப்பட்ட கால் தடயங்களை ஆய்வு செய்தனர். பின்னர் கன்றுக்குட்டியை கடித்து கொன்றது புலிதான் என்று உறுதி செய்தார்கள்.

கன்றுக்குட்டியின் உடலை பாதி தின்றுவிட்டு, எஞ்சியதை போட்டுவிட்டு சென்றதால் புலி மீண்டும் அங்கு வரும் என்று திகினாரை பொது மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். அதனால் புலி வந்தால் அதை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விடவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

மேலும் செய்திகள்