பந்தலூர் அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டுயானைகள் பொதுமக்கள் பீதி

பந்தலூர் அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டுயானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

Update: 2019-04-07 22:45 GMT

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அத்திக்குன்னா, அத்திமா நகர் ஆகிய பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வனப்பகுதியில் பசுந்தீவனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், காட்டுயானைகள் ஊருக்குள் நுழைகின்றன. மேலும் வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று அட்டகாசம் செய்கின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அத்திமாநகருக்குள் 13 காட்டுயானைகள் புகுந்தன. இதைத்தொடர்ந்து குடியிருப்புகளை விடிய, விடிய முற்றுகையிட்டன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். நேற்று அதிகாலை வரை அங்கு காட்டுயானைகள் நின்றிருந்தன. பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. ஆனால் மாலை நேரத்தில் மீண்டும் அப்பகுதிக்கு காட்டுயானைகள் வந்தன. மேலும் அருகிலுள்ள தேயிலை தோட்டங்களில் உலா வந்தன.

இதன் காரணமாக தேயிலை தோட்டங்களில் இருந்து பச்சை தேயிலை பறிக்கும் பணியை கைவிட்டு தொழிலாளர்கள் வெளியேறினர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் தேவாலா வனச்சரகர் சரவணன், வன காப்பாளர் லூயிஸ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காட்டுயானை வனத்துறையினரை துரத்தியது. இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்து இடம் பெயர்ந்த காட்டுயானைகள் தேவாலா செல்லும் சாலையில் வந்து நின்றன. இதனால் சிறிது நேரம் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினரின் தொடர் நடவடிக்கையால், காட்டுயானைகள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டன. அதன்பின்னரே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்