தபால் ஓட்டுகள் இல்லாததால் தேர்தல் பார்வையாளரை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்
வேடசந்தூரில், தபால் ஓட்டுகள் இல்லாததால் தேர்தல் பார்வையாளரை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.
வேடசந்தூர்,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சியில் திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இவர்கள், தபால் ஓட்டு போடுவதற்காக அரசு பள்ளியில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஓட்டு போடுவதற்காக ஆசிரியர்கள் சென்றனர். ஆனால் 50 சதவீதம் பேருக்கு ஓட்டுகள் இல்லாததை கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் பிரசாந்த் குமார் தபால் ஓட்டு பதிவு செய்யும் கட்டிடத்துக்கு வந்தார்.
இதற்கிடையே ஓட்டு இல்லாத ஆசிரியர்கள், தேர்தல் பார்வையாளரை முற்றுகையிட்டனர். மேலும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வேடசந்தூர் தாசில்தார் சுரேஷ்கண்ணன், துணை தாசில்தார் நாட்ராயன், வருவாய் ஆய்வாளர் விஜயராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் ஆகியோர் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ள 3-ம் கட்ட பயிற்சியில் விடுபட்டவர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் எதிரொலியாக தபால் ஓட்டு பதிவு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திண்டுக்கல்லில் ஒரு பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டன. ஆனால், மாவட்ட தேர்தல் அதிகாரியின் கையெழுத்து அதில் இல்லை. அவ்வாறு கையெழுத்து இல்லாமல் போனால், செல்லாதவையாகி விடும் என்று தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். அதையடுத்து தபால் ஓட்டுகள் திரும்ப பெறப்பட்டன. அதன்பின்னர் மீண்டும் தபால் வாக்குகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சில ஆசிரியர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து பெட்டியில் செலுத்தினர்.