நடத்தையில் சந்தேகம் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவருக்கு வலைவீச்சு
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.
அம்பர்நாத்,
தானே மாவட்டம் உல்லாஸ்நகரில் உள்ள முகுந்த் நகரை சேர்ந்தவர் திலீப் (வயது35). பிளம்பர். இவரது மனைவி ரேகா (35). இவர்களுக்கு 13 வயது மகள், மகன் உள்ளனர். ரேகா வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். இது திலீப்புக்கு பிடிக்கவில்லை. மேலும் அவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்தது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் குடிபட்வா அன்று ரேகா வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து அவர் மாலை வீட்டுக்கு வந்தார். அப்போது, விடுமுறை நாள் அன்று வேலைக்கு போனது குறித்து திலீப், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த அவர் ரேகாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 13 வயது மகள், தந்தையை தடுத்தார். ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த அவர் மகளை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை பூட்டினார். பின்னர் அவர் மீண்டும் துப்பட்டாவால் ரேகாவின் கழுத்தை நெரித்தார். இதில், ரேகா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து திலீப் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதற்கிடையே சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மயங்கி கிடந்த ரேகாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரேகாவின் கணவர் திலீப்பை தேடி வருகின்றனர்.