இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து நடிகை ஊர்மிளா மடோங்கர் மீது போலீசில் புகார்
இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை ஊர்மிளா மடோங்கர் மீது பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சுரேஷ் நகுவா போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
மும்பை,
மும்பையை சேர்ந்த பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோங்கர். இவர் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி நடிகை ஊர்மிளா மடோங்கருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. அதன்படி அவர் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்தநிலையில், பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சுரேஷ் நகுவா நேற்று முன்தினம் நடிகை ஊர்மிளா மடோங்கர் மீது மும்பை போலீசில் கிரிமினல் புகார் கொடுத்து உள்ளார்.
அந்த புகாரில், கடந்த 5-ந் தேதி இரவு 8 மணிக்கு டி.வி.யில் நடிகை ஊர்மிளா மடோங்கரின் பேட்டியை பார்த்தேன். அதில், அவர் இந்த உலகத்திலேயே வன்முறை நிறைந்த மதம் இந்து மதம் என கூறினார். இது இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தும் விதத்தில் உள்ளது.
அவரது இந்த கருத்து மிகவும் கீழ்தரமானது. உள்நோக்கம் கொண்டது. இது பலதரப்பட்ட மதத்தினர் வாழும் நாட்டில் விரோதத்தை உண்டாக்கும். எனவே நடிகை ஊர்மிளா மடோங்கர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘புகார் மனுவை நாங்கள் பெற்றுக்கொண்டோம். சட்ட ஆலோசனைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்’ என்றனர்.