பா.ஜனதா, அ.தி.மு.க. அரசுகள் தொடர ஆதரவு தாருங்கள் பிரேமலதா பேச்சு
பா.ஜனதா, அ.தி.மு.க. அரசுகள் தொடர ஆதரவு தாருங்கள் என்று தே.மு.தி.க. மாநில பொருளாளர் பிரேமலதா பேசினார்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து, தே.மு.தி.க. மாநில பொருளாளர் பிரேமலதா நேற்று இரவில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.
பின்னர் அவர், விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின்போது பிரேமலதா கூறியதாவது:-
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெற்றி பெற்றால், அவர் நிச்சயம் மத்திய மந்திரியாவார். அவர் இங்கு தொழில் வர்த்தக மையத்தை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவார். உப்பளம், மீன்பிடிதொழில் போன்றவற்றை நவீனமாக்கி, மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்.
இலங்கையில் தமிழின படுகொலைக்கு காரணமான தி.மு.க.-காங்கிரசை யாரும் மறக்கவில்லை. அவர்களுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். கடந்த முறை தி.மு.க. ஆட்சியின்போது, எங்கும் நில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத்து நடந்தது. அமைச்சர்கள் குறுநில மன்னர்களாகவே விளங்கினர். அப்போது தினமும் 15 மணி நேரம் வரையிலும் மின்வெட்டு இருந்தது.
ஆனால் தற்போது தமிழகம் அமைதிப்பூங்காவாக, மிகை மின் மாநிலமாக உள்ளது. இதனால் சிறிதுநேரம்கூட மின்வெட்டே கிடையாது. இதனால் தமிழகம் அனைத்து துறைகளிலும் பிரகாசிக்கிறது. மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பை உயர்த்தியவர் பிரதமர் நரேந்திர மோடி. எதிரிகளின் மீது நடந்த துல்லிய தாக்குதல், விண்வெளியில் நடந்த ஏவுகணை தாக்குதலைப் பார்த்து உலகமே வியக்கிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை வரக் காரணமே தி.மு.க.தான். அதனை தடுத்து நிறுத்தியதுதான் அ.தி.மு.க.. இதனை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதேபோன்று விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் புதைப்பு, நியூட்ரினோ என்று பல்வேறு நாசக்கார திட்டங்களையும் தி.மு.க.தான் கொண்டு வந்தது.
தி.மு.க. வேட்பாளர் கனிமொழி என்றாலே அனைவருக்கும் அவர் 2ஜி ஊழல் முறைகேட்டில் திகார் சிறையில் இருந்ததுதான் நினைவுக்கு வருகிறது. நாட்டுக்கு தேவையில்லாததை கொண்டு வந்தது தி.மு.க.. நாட்டுக்கு தேவையானவற்றை கொண்டு வந்தது அ.தி.மு.க., பா.ஜனதா அரசுகள். எனவே பா.ஜனதா, அ.தி.மு.க. அரசுகள் தொடர ஆதரவு தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவருடன் அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வக்கீல் அழகர்சாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.